”கலை” மனிதனின் வாழ்வியல் அங்கம்                     பேசாமல் பேசும் “ஓவியக்கலை”யின் மௌனமே மொழி                      வாணுலகும் வந்து இறங்கும் இந்த “நாடக மேடையில்”                        சிலையின் நுணுக்கமும் சிற்பியின் கைவண்ணமும் கலைக்கு அற்பணம்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இசைக்கலை

உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் இசை பிறந்துவிட்டதென்பர். மனிதன், தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இசையே கருவியாயிற்று. 

பண்டைக்காலத் தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. பண்கள், இசைக் கருவிகள், இசைக்கலைஞர்கள், இசைப்பாடல்கள் என இசை பற்றிய ஏராளமான குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன. 

தொல்காப்பியமும், சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும் இசை மரபுகளை வெளிப்படுத்துகின்றன. ‘நரம்பின் மறை’ என்று தொல்காப்பியர் உரைப்பதன் மூலம் இசை இலக்கணநூல் உண்டென உணரமுடிகிறது.

மேலும் பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று இயலிசை நாடகக் கலைஞர்கள் இருந்தமையையும் அறிய முடிகிறது.

தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்புவரைக்கும் இசையே முதன்மை பெறுகிறது. தாலாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலிலிட்டுப்பாடுவது.
ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைபற்றிப்பாடுவது.



ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே – என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே – என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா – என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!   
       
         என்று தாலாட்டுப்பாடல் அமைந்துள்ளது.  


நிலவோ நிலவுதவி என்ரை ராசா
எனக்கு
நிலவுபட்டால் ஆருதவி ........
பொழுதோ போழுதுதவி என்ரை ராசா
எனக்குப் பொழுதுபட்டால் ஆருதவி ...........
கொத்த வேண்டாம் வெட்ட வேண்டாம்
என்ரை நீல நையினார்  நீ
எனக்கொரு
கொள்ளி  வைச்சால் காணுமடா
பார்க்க வேண்டாம் எடுக்க வேண்டாம்
என்ரை நீல நையினார்  நீ எனக்குப்
பால் வார்த்தால் காணுமடா .......

நான் பெத்தேன் பிலாப் பழத்தை
இப்ப
பிச்சு வைச்சேன் சந்தியிலை .....
பள்ளிக்கூடம் தூரமெண்டு
என்ரை ராசாவை
நான் பக்கத்தே வைச்சிருந்தேன்
தோட்டம் தொலை தூரமெண்டு
என்ரை ராசாவை நான்
தொட்டிலிலை  வைச்சிருந்தேன்.




                                     என்று இறுதி சடங்குகளில் ஒப்பாரி அமைந்துள்ளது.
 
இன்றைய கருநாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே.
‘பண்ணொடு தமிழொப்பாய்’ என்னும் தேவாரம், பண்ணும் தமிழும் பிரிக்க முடியாததொன்று என்று நவிலும். தமிழர், ஐவகை நிலத்திற்கும் ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தன்ர். தோற்கருவி, துளைக்கருவி எனப் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இன்புற்றனர்.
குழலினிது யாழினிது என்று இசைபொழியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது. இதன்மூலம் தமிழிசை தொன்மையும் சிறப்பும் பெற்றிருந்ததனை அறியலாம்.

கட்டிடக்கலை


சங்க கால கட்டிடங்கள் அழியதக்க செங்கல், மரம் முதலியவற்றால் அமைக்கப்பட்டவை எனலாம். பல்லவர்கள் காலத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய குடவரைக் கோயில்களின் மூலம், ஒரு புதிய வகை சிற்பம் மற்றும் கட்டிடக்கலை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் மலைப் பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய மண்டபங்கள் அமைக்கப்பட்டன (எடுத்துக்காட்டு மாமல்லபுரதிலுள்ள மகிஷாசுர மண்டபம்).  பின் ரதம் போன்று செதுக்கப்பட்ட ஒற்றைக்கற்கோவில்களை அமைத்தனர். அதன் பின் செதுக்கப்பட்ட கற்பாறைகளை இணைத்து கற்கோயில்களை கட்டினர். எடுத்துக்காட்டாக மாமல்லபுர கடற்கரை கொயில்,காஞ்சி சைலாச நாதர் ஆலயம் வைகுந்த பெருமாள் ஆலயம். இக்கோயில்களிலுள்ள விமானங்கள் தனி சிறப்பு வாயிந்தவை. 

தஞ்சை பெரியக்கோவில்
பல்லவ கால கட்டிடக்கலை பிற்கால சோழர் காலத்தில் மேலும் விரிவு படுத்தப்பட்டது. சோழர்கள் காலத்தில் பிரம்மாண்டமான வானளாவிய கோயில்கள் கட்டப்பட்டன. பரந்துவிரிந்த வளாகங்கள், பாதுகாப்பான உட்புற சுற்றுசுவர், சிற்பவேலைப்பாடு மிக்க அழகிய தூண்களுடன் கூடிய மண்டபங்கள் (மகா மண்டபம், அர்த்த மண்டபம், நாத்தன மண்டபம், வாத்திய மண்டபம்) கருவறை, பெரிய விமானங்கள், தளங்கள் கட்டப்பட்டன. 

கடவுளர்களுக்காக கருவறைகல் போன்ற கூறுகள் குறிப்பிடத்தக்கவை. தஞ்சை பிரகதீஸ்வரம்,கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற இடங்களில் காணப்படுகின்ற  கோயில்கள் சோழர் காலக் கட்டிடக்கலைக்குச் சிறந்த சான்றுகள். இக்கோயில்களில் எல்லாம் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

குன்றங்குடி குடவரைக்கோவில்

ஓவியக் கலைக்குச் சான்றாக சித்தன்னவாசல் குகைகள், காஞ்சி கைலாச நாதர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்கள் போன்றவைகளில் மிகச் சிறந்த ஓவியங்கள் உள்ளன. கல்லிலே சிலை வடித்தது போன்று, வெண்கலம்  போன்ற உலோகத்தாலும் சிலைகள் வார்க்கப்பட்டன. சோழர் காலத்திய வெண்கலத்தால் ஆன நடராசர் சிலை, சைவ, வைஷ்ணவ உற்சவ மூர்த்தி சிலைகள், 63 நாயன்மார்களின் சிலைகள் உலக புகழ் பெற்றவையாம். தமிழர்கள் தங்களுக்கென கணிதம், காலவியல், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினர். சங்க இலக்கியங்களில் எண், கணக்கு நாழிகை, யாமம், காதம், கோல் போன்ற அளவைகளும், இலையுதிர், இளவேனில் போன்ற கால கணக்குகளையும் காணலம். ஏலாதி, திரிகடுகம், சிறு பஞ்சமூலம் போன்ற நூல்களில் பெயர்கள் மூலம் அவர்களின் மருத்துவ அறிவை அறியலாம்.


மாமல்லவரம்

கணியன் என்பவர் வானவியல் மற்றும் ஜோதிடவியல் வல்லவராவார். தமிழ் சித்த்ர்கள் சித்த வைத்திய முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் தங்கள் ஆய்வுகளையும், சிகிச்சைகளையும், மருந்து தயாரித்தலை பற்றியும் மருந்து தயாரிக்க பயன்படுத்திய மூலிகைகள் பற்றியும், தெளிவாக எழுதி வைத்துள்ளனர்.

இறுதியாக தமிழர்கள், மனிதச் செயல்பாடுகளின் பல துறைகளிலும் சிறந்து விளங்கினர். அவர்களின் தத்துவம் பேரளாவிய உலகப் பார்வை கொண்டது. அவர்களது இறையியல் மூட நம்பிக்கைகளுக்கு அதிக இடமளிக்கவில்லை. சமண, பௌத்த சமயங்கள் போன்று தமிழர்களும் “தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். மனிதன் தன் விதியை தானே தீர்மானிக்கிறான் என்பதில் தெளிவாக இருந்தான். இந்திய வரலாற்றில் தமிழர்களின் மரபு ஒரு புகழ் வாய்ந்த பகுதியாகும்.

  
சங்க கால வீடு



பறையாட்டம்

பறையாட்டம் அல்லது தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும்.  பறையாட்டம் உணர்ச்சி மிக்கது மற்றும் எழுச்சி மிகுந்தது.
தப்பு அல்லது பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது தப்பாட்டம் அல்லது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஆதி மனிதன் தங்களுடைய சமூகம் ஒன்று கூடுதலுக்காகவும்தங்கள்
குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம் எழும் சத்தமாகும்.

ஊர் விழாக்களில் நடைப்பெற்ற பறையாட்டம்.

ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி இந்த பறையாட்டத்திற்கு உண்டு.

வரலாறு

 

விலங்குகளைக் கொன்று, தின்று, மிஞ்சியத்தோலை எதிலாவது கட்டிவைத்து, காய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய ஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவமாகவும், வாழ்வியல் உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறியது.

பறை இசைக்கருவி

திருமணம்,  இறப்பு, சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுகம் மற்றும்  துக்கங்களிலும் இடம் பெறும் கலையாக மாறியது.

சமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில், கடினமான,  இசைக்கச் சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும், இலகுவான இசைக்கருவிகளை தங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர். மேலும் சாதி கோட்பாடு, கலை நிகழ்த்துவோரையும், தொழிலை மையப்படுதியும் சாதி பிரிக்கப்பட்டது.  அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் கலையாக பறை ஆட்டம் ஒதுக்கப்பட்டது.  தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லி பலநூறு ஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள், உரிய கல்வி கிடைக்காமல், நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்த தருணங்களில், அவர்களின் வாழ்க்கை முறையையே காரணமாகக் கூறிய நவீன சமூகம், அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தை, சாவுமேளம் என முத்திரை குத்தியது.


ஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது சாதியை மையப்படுத்தும் குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட, அச்சமூகத்தின் விடுதலை எண்ணிக்கொண்டிருந்த இளைஞர்கள் பறையடித்தலை அவமானமாக கருத தொடங்கினர்.  இவ்விதமெ பறையாட்டம் மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இறுதி சடங்குகளில் பறையாட்டம்

சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு. இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர், ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவ கோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுவதுண்டு.

சிறப்பு


ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி அடிவகைகள் உள்ளன.
  •   சப்பரத்து அடி
  •     டப்பா அடி
  •     பாடம் அடி
  •     சினிமா அடி
  •     ஜாயிண்ட் அடி
  •     மருள் அடி
  •   சாமிச்சாட்டு அடி
  •   ஒத்தையடி
  •   மாரடிப்பு அடி
  •    வாழ்த்தடி
         என பல வகை அடிகள் உள்ளன.

இக்கலைக்கெனப் பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர்.
நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் எனப் பார்வையாளனை ஈர்க்கத்தக்க இரசனை மிகுந்த கலையாடல்கள் இதில் உண்டு.

தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடு துணைக்கருவியாகத் தவில் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில் டிரம் பயன்படுத்துகிறார்கள்.

தமிழகத்தில் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இக்கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது.

ஓவியக்கலை

எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக்கொள்ளைகொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம். காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்தகலை ஓவியக்கலை. 

ஓவியம் பேசும் செய்திகள் பல, உணர்த்தும் கருத்துகளோ மிகப்பல.

தமிழகத்தில் தொன்றுதொட்டு விளங்கிவந்த பாரம்பரியக் கலைகள் பல. அவற்றுள் பல, காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு அழிந்துபோயின. எஞ்சிய சில, தமிழர்களின் கலைத்திறன்களையும் கலை நுட்ப அறிவையும் உலகோர்க்கு எடுத்துகாட்டும் ஒளி விளக்குகளாகத் திகழ்கின்றன. தமிழர் வளர்ந்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது.

பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினர். தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து வெளிப்படுதினர். இவற்றை தொல்பொருள் ஆய்வுகளாலும் இலக்கியச் சான்றுகளாலும் அறிந்துகொள்ள முடிகிறது.


தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.
தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் இருந்ததனைப் பரிபாடல், குறுந்தொகை செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.

எனவே, பழங்கால மக்கள் சித்திர எழுத்துகளால் கருத்துகளைப் புலப்படுத்தினர். அவையே நாளடைவில் மொழிக்குறியீடுகளாக வளர்ந்துள்ளன.

ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவை கோட்டோவியங்கள் எனப்படும்.

இலக்கியங்களில் ஓவியக்கலை:


தொல்காப்பியம் ”நடுகல் வணக்கம்” பற்றிக் கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது. சிற்பி, தான் செதுக்கருவிக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அவ்வோவியத்தைக்கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு. இதன்படி ஆராய்ந்து நோக்கினால் செதுக்குவதற்கு ஓவியம் துணை புரிந்தையும், ஓவியம் முன்னரே வளர்ந்திருந்ததையும் உணர முடிகின்றது.

ஆடல் மகள் மாதவி, ”ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்” எனச் சிலம்பு பகர்கிறது.

புறநானூற்றில், “ஓவத்தனைய இடனுடை வனப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஓப்ப வைத்து”  கவிஞர் போற்றுகிறார்.

நாச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்துள்ளார்.

ஆண் ஓவியர் “சித்திராங்கதன்” என்றும் பெண் ஓவியர் “சித்திரசேனா” எனவும் பெயர் பெற்றிருந்தினர்.

ஓவியக்கலை

 

ஓவியக்கலை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் வழங்கப்படுகிறது.

ஓவியக்கலைஞர்

 

ஓவியக் கலைஞர் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.

வரைகருவிகள்


பல்வகைக் காட்சிகள், உருவங்கள் வரைய ஓவியர் அக்காலத்தில் பல்வகைக் கருவிகளைப் பயன்படுத்தினர்.
வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயரிட்டிருந்தனர்.

வரைவிடங்கள்


அக்காலத்தில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைந்திருந்தன.  ஓவியங்கள் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் எனப் வழங்கப்பட்டன. அரசர் வாழும் அரண்மனை அந்தப்புரங்கள், செல்வர் வாழும் வளமனைகள், மாளிகைகள், ஆடலரங்குகள், கோவில் மண்டபங்கள், பொதுமன்றங்கள் முதலிய இடங்களில் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள், தூண்களில் ஓவியங்களை வரைந்தனர். ஓவியத்தால் மக்கள் வீடுகளை அலங்கரித்தனர்.

சித்தன்னவாசல் ஓவியம்


மகேந்திரவர்மன் காலத்திற்குப் பின்னர்த் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரசர்கள் ஓவியகலையை வளர்த்து வந்துள்ளார்கள். பல்லவர் கால ஓவியங்கள், பனமலை, திருமலை, மாமல்லபுரக் குகைக்கோவில், மாமண்டூர், காஞ்சிக் கைலாசநாதர் கோவில் முதலிய இடங்களில் ஓவியங்கள் சிதைந்த தோற்றத்தோடு காணப்படுகின்றன. 




புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்க்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றத்தகுந்தன. அங்குள்ள தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன், அரசி ஓவியங்கள் நம் கண்னைக் கவர்வன,