”கலை” மனிதனின் வாழ்வியல் அங்கம்                     பேசாமல் பேசும் “ஓவியக்கலை”யின் மௌனமே மொழி                      வாணுலகும் வந்து இறங்கும் இந்த “நாடக மேடையில்”                        சிலையின் நுணுக்கமும் சிற்பியின் கைவண்ணமும் கலைக்கு அற்பணம்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இசைக்கலை

உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் இசை பிறந்துவிட்டதென்பர். மனிதன், தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இசையே கருவியாயிற்று. 

பண்டைக்காலத் தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. பண்கள், இசைக் கருவிகள், இசைக்கலைஞர்கள், இசைப்பாடல்கள் என இசை பற்றிய ஏராளமான குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன. 

தொல்காப்பியமும், சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும் இசை மரபுகளை வெளிப்படுத்துகின்றன. ‘நரம்பின் மறை’ என்று தொல்காப்பியர் உரைப்பதன் மூலம் இசை இலக்கணநூல் உண்டென உணரமுடிகிறது.

மேலும் பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று இயலிசை நாடகக் கலைஞர்கள் இருந்தமையையும் அறிய முடிகிறது.

தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்புவரைக்கும் இசையே முதன்மை பெறுகிறது. தாலாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலிலிட்டுப்பாடுவது.
ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைபற்றிப்பாடுவது.ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே – என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே – என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா – என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!   
       
         என்று தாலாட்டுப்பாடல் அமைந்துள்ளது.  


நிலவோ நிலவுதவி என்ரை ராசா
எனக்கு
நிலவுபட்டால் ஆருதவி ........
பொழுதோ போழுதுதவி என்ரை ராசா
எனக்குப் பொழுதுபட்டால் ஆருதவி ...........
கொத்த வேண்டாம் வெட்ட வேண்டாம்
என்ரை நீல நையினார்  நீ
எனக்கொரு
கொள்ளி  வைச்சால் காணுமடா
பார்க்க வேண்டாம் எடுக்க வேண்டாம்
என்ரை நீல நையினார்  நீ எனக்குப்
பால் வார்த்தால் காணுமடா .......

நான் பெத்தேன் பிலாப் பழத்தை
இப்ப
பிச்சு வைச்சேன் சந்தியிலை .....
பள்ளிக்கூடம் தூரமெண்டு
என்ரை ராசாவை
நான் பக்கத்தே வைச்சிருந்தேன்
தோட்டம் தொலை தூரமெண்டு
என்ரை ராசாவை நான்
தொட்டிலிலை  வைச்சிருந்தேன்.
                                     என்று இறுதி சடங்குகளில் ஒப்பாரி அமைந்துள்ளது.
 
இன்றைய கருநாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே.
‘பண்ணொடு தமிழொப்பாய்’ என்னும் தேவாரம், பண்ணும் தமிழும் பிரிக்க முடியாததொன்று என்று நவிலும். தமிழர், ஐவகை நிலத்திற்கும் ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தன்ர். தோற்கருவி, துளைக்கருவி எனப் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இன்புற்றனர்.
குழலினிது யாழினிது என்று இசைபொழியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது. இதன்மூலம் தமிழிசை தொன்மையும் சிறப்பும் பெற்றிருந்ததனை அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக