மனிதன்
படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது சிற்பக்கலை
என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது.
மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும்
சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. தமிழ் நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள்
வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.
கண்ணால்
கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோ வடிவமைத்துச்
செய்வது சிற்பம் எனப்படும். அதனை
வடிபவன் சிற்பி எனப்படுவான்.
கல், உலோகம், செங்கல், மரம்,
சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை,
மெழுகு என்பன சிற்பம் வடிக்க
ஏற்றவை என கூறுவர்.
கல்லில்,
கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம்,
செம்பும் ஏற்றனவாகக் கருதப்பட்டன.
வடிவம்
முழுவதையும் முன்புறம் பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களை “முழுவடிவச் சிற்பங்கள்” என்றும் வடிவத்தின் ஒருபுறம்
மட்டும் காட்டும் சிற்பங்களைச் “புடைப்புச் சிற்பங்கள்” என்றும் வகைப்படுத்துவர்.
கோயில்களில்
காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும் உற்சவச்
திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.
தமிழ்நாட்டுச்
சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள்
அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும்.
இவ்விரு கலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால், இவை எளிதாக கைவரப்பெற்றன.
சிற்ப வடிவங்கள் நின்றாலும், அமர்ந்தாலும் கிடந்தாலும் வேறெந்த அமைதியில் தோன்றினாலும்,
அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக்
காணலாம். சிற்பிகள் ஆடற்கலை இலக்கணத்தை நன்கு அறிந்து
தம் கலையுணர்வு, கற்பனைத் திறன் கலந்து அமைப்பதால்,
தெய்வத் திருமேனிகள் நிறுவப்படும் இடத்துக்குத் தக்கவாறு கலையழகை மட்டுமன்றி அவ்வடிவ
அமைப்புகளின் உட்கருத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளன.
தமிழகத்தில்
பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள்
வரலாற்றுப் புகழ் பெற்றவை. பாண்டியர்
கால சிற்பங்களும் தமிழகச் சிற்பங்களின் கலைத்திறனுக்குச்
சான்றாய் விளங்குகின்றன. தமிழகத்தில் சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில்,
தஞ்சைப் பெரிய கோயில், கங்கை
கொண்ட சோழீச்சுரம், தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை.
இவை சிற்பக் கலை வளர்ச்சியையும்,
அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்த
பெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.
இரண்டாம்
இராசராசனின் கலைப்படைப்பாய் எழுந்த ஐராவதேசுவரர் திருக்கோயில்,
சிற்பக்கலைச் சாதனைகளின் உச்சம் என்பர். அழகிலும்
நுணுக்கத்திலும் ஆற்றலிலும் மிக உன்னத நிலையிலிருந்தே
இச்சிற்பக் கலையின் எச்சமாக கம்போடியாவின்
‘அங்கோர் வாட்’ கோயில்களிலும் நம்
நாட்டு ‘லெம்பா பந்தாய்’ பள்ளத்தாக்கிலும்
சிதைவுற்றிருக்கும் சிற்பங்களே சீரிய எடுத்துக்காட்டுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக