”கலை” மனிதனின் வாழ்வியல் அங்கம்                     பேசாமல் பேசும் “ஓவியக்கலை”யின் மௌனமே மொழி                      வாணுலகும் வந்து இறங்கும் இந்த “நாடக மேடையில்”                        சிலையின் நுணுக்கமும் சிற்பியின் கைவண்ணமும் கலைக்கு அற்பணம்

வியாழன், 11 செப்டம்பர், 2014

தெருக்கூத்து

கூத்துக்கலையின் அடையாளமாக சென்னையில் அமைக்கப்பட்ட சிலை.
தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். இது தமிழர்களின் பழங்க்கலைகளில் ஒன்றாகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும்.
 
தெருக்கூ த்து 

சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம், பாடல் வசனம்ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும். பார்வையாளர்கள் கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர்.

கூத்து நடைபெறும் இடம்


தெருக்கூத்து நடைபெறும் இடம் களரி எனப்படும். ஊரின் புறத்தே அல்லது கோவில் திடல்களில், அல்லது அறுவடை ஆன வயல்களின் நடுவே இக்கூத்தானது நடைபெறும். கூத்து நடைபெறும் இடத்தை முதலில் சுத்தப்படுத்துவர். பின்பு அத்திடலில் இரு கழிகளை நட்டு அவற்றில் விளக்குகளைக் கட்டுவர். கழிகளுக்கு இடையில் உள்ள இடமே கூத்து நடைபெறும் இடமாகும். இதனை விட்டமாகக் கொண்டே மக்கள் வட்டமாகச் சுற்றி அமர்வார்கள். கழிகளுக்கு இடையாக ஓர் ஓரத்தில் ஒரு அகன்ற விசுப்பலகை போடப்பட்டிருக்கும். அதன் பின்னே தென்னங் கிடுகுகளால் அறை அமைக்கப்பட்டிருக்கும். இது கூத்தில் நடிக்கும் நடிகர்களின் ஒப்பனை அறையாகும்.

 

பின்பாட்டுக் காரர்கள்


கூத்திற்கு மிக இன்றியமையாத ஒன்று பின்பாட்டு ஆகும் . ஆடலும் பாடலும் இணைந்த நாட்டிய நாடகமே தெருக்கூத்து. இக்கூத்தில் பின்பாட்டு பாடுபவர்கள் இவர்களே ஆவார்கள். ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மைக்கேற்ப இவர்கள் பாடுவர். பாட்டின் இடையே வசனம் பேசுவதும் இவர்களே. இவர்கள் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமை மிகுந்தோராய் இருப்பர். இவர் விசுப்பலகையில் அமர்ந்து இசைக்கருவிகளை இசைப்பர்

 

இசைக்கருவிகள்


தெருக்கூத்தில் ஆர்மோனியம், மத்தளம், தாளம், முகவீணை(மோர்சிங்) முதலிய கருவிகள் பின்னனி இசைக்காகப் பயன் படுத்தப்படும்.

 

கட்டியங்காரன்


கட்டியங்காரன் என்பவரே கூத்தின் முக்கிய நபராவார். கூத்தினைத் தொடங்கி வைத்தல், கூத்தின் கதா பாத்திரங்களை அறிமுகம் செய்தல், கூத்தின் இடையே சிறு சிறு பாத்திரங்களை ஏற்று நடித்தல், கூத்தின் கதையை விளக்குவதோடு இடையிடையே மக்களை மகிழ்விக்கும் விதமாக கோமாளி போல நகைச்சுவையைக் கையாளுதல், கூத்தினை முடித்து வைத்தல் ஆகிய பணிகளையும் இவர் செய்வார்.
தெருக்கூத்து கலைஞர் 

ஆடை அணிகலண்கள்

 

கட்டியங்காரனுடைய உடை முழுக்கால் சட்டையும் பல வண்ணங்கள் கொண்ட மேல் சட்டையும் கோமாளித் தொப்பியும் ஆகும். மற்றவர் கதைக்கு ஏற்பவும், பாத்திரத்தின் தன்மைக்கேற்பவும், உடலோடு ஒட்டிய முழுக் கால் சட்டை, அதன் மேல் குட்டைப் பாவாடை போன்ற உடையும் அணிவர். பாத்திரத்திற்கேற்ற மேல் உடையும் கட்டைகளால் ஆன மகுடம், மார்புப் பதக்கம், தோளணிகள்(புஜகீர்த்திகள்), போன்ற அணிகளை அணிவர். வண்ணக் காகிதங்கள், பாசிமணிகள், கண்ணாடித் துண்டுகள் போன்றவற்றால் அணிகலன்கள் அழகுபடுத்தப் பட்டிருக்கும். பெண் வேடதாரிகள் சேலையும் ரவிக்கையும் அணிந்து குறைவான அணிகலன்களை அணிவர்.

 

விதிமுறைகள்

கூத்து தொடங்கும் முன் இசைக் கருவிகள் அனைத்தும் ஒருசேர ஒலிக்கும். இதனை களரி கட்டுதல் என்பர். அதாவது கூத்து தொடங்கிவிட்டது என ஊருக்கு அறிவிக்கும் நிகழ்ச்சி இது.



  • கூத்தாடுகளத்தின் நடுவில் இருவர் வந்து வேட்டியைத் திரையாகப் பிடித்தபடி நிற்பர். கூத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக மேடையில் தோன்றுவதற்கு முன்னர், இத்திரையின் பின் நின்று பாடிய பின்பே மக்கள் முன் காட்சி தருவர்.
  • தெருக்கூத்தில் பெண்கள் நடிக்கும் வழக்கம் இல்லை. ஆண்களே பெண்வேடமிட்டு நடிப்பர்.
  • பல நாட்கள் தொடர்ந்து நடக்கும் கூத்துகளில், கூத்து தொடங்கி முடியும் வரை கூத்தில் நடிப்பவர்கள் நோண்பிருப்பர்.

 


இன்றைய நிலை

தெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக மட்டுமன்றி கோவில் விழாவின் ஒரு பகுதியாகவும், பக்தியை பரப்பும் கருவியாகவும் அமைகின்றது. கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில் வருகின்ற கூத்தர்களை கடவுளராக எண்ணி பார்வையாளர்கள் வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும். அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப் பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது. தற்காலத்தில் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இடம்பெறும் இக்கூத்துக் கலை இன்றைய காலகட்டத்தில் அருகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக