”கலை” மனிதனின் வாழ்வியல் அங்கம்                     பேசாமல் பேசும் “ஓவியக்கலை”யின் மௌனமே மொழி                      வாணுலகும் வந்து இறங்கும் இந்த “நாடக மேடையில்”                        சிலையின் நுணுக்கமும் சிற்பியின் கைவண்ணமும் கலைக்கு அற்பணம்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பறையாட்டம்

பறையாட்டம் அல்லது தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும்.  பறையாட்டம் உணர்ச்சி மிக்கது மற்றும் எழுச்சி மிகுந்தது.
தப்பு அல்லது பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது தப்பாட்டம் அல்லது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஆதி மனிதன் தங்களுடைய சமூகம் ஒன்று கூடுதலுக்காகவும்தங்கள்
குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம் எழும் சத்தமாகும்.

ஊர் விழாக்களில் நடைப்பெற்ற பறையாட்டம்.

ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி இந்த பறையாட்டத்திற்கு உண்டு.

வரலாறு

 

விலங்குகளைக் கொன்று, தின்று, மிஞ்சியத்தோலை எதிலாவது கட்டிவைத்து, காய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய ஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவமாகவும், வாழ்வியல் உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறியது.

பறை இசைக்கருவி

திருமணம்,  இறப்பு, சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுகம் மற்றும்  துக்கங்களிலும் இடம் பெறும் கலையாக மாறியது.

சமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில், கடினமான,  இசைக்கச் சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும், இலகுவான இசைக்கருவிகளை தங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர். மேலும் சாதி கோட்பாடு, கலை நிகழ்த்துவோரையும், தொழிலை மையப்படுதியும் சாதி பிரிக்கப்பட்டது.  அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் கலையாக பறை ஆட்டம் ஒதுக்கப்பட்டது.  தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லி பலநூறு ஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள், உரிய கல்வி கிடைக்காமல், நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்த தருணங்களில், அவர்களின் வாழ்க்கை முறையையே காரணமாகக் கூறிய நவீன சமூகம், அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தை, சாவுமேளம் என முத்திரை குத்தியது.


ஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது சாதியை மையப்படுத்தும் குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட, அச்சமூகத்தின் விடுதலை எண்ணிக்கொண்டிருந்த இளைஞர்கள் பறையடித்தலை அவமானமாக கருத தொடங்கினர்.  இவ்விதமெ பறையாட்டம் மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இறுதி சடங்குகளில் பறையாட்டம்

சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு. இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர், ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவ கோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுவதுண்டு.

சிறப்பு


ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி அடிவகைகள் உள்ளன.
  •   சப்பரத்து அடி
  •     டப்பா அடி
  •     பாடம் அடி
  •     சினிமா அடி
  •     ஜாயிண்ட் அடி
  •     மருள் அடி
  •   சாமிச்சாட்டு அடி
  •   ஒத்தையடி
  •   மாரடிப்பு அடி
  •    வாழ்த்தடி
         என பல வகை அடிகள் உள்ளன.

இக்கலைக்கெனப் பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர்.
நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் எனப் பார்வையாளனை ஈர்க்கத்தக்க இரசனை மிகுந்த கலையாடல்கள் இதில் உண்டு.

தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடு துணைக்கருவியாகத் தவில் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில் டிரம் பயன்படுத்துகிறார்கள்.

தமிழகத்தில் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இக்கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது.

1 கருத்து: